Find us on Facebook

Tuesday, September 20

லீசெஸ்டர்ஷைர் அணியை எளிதாக வீழ்த்தியது: சாம்பியன்ஸ் லீக் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது, டிரினிடாட் அணி


லீசெஸ்டர்ஷைர் அணியை வீழ்த்தியதன் மூலம் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணி சாம்பியன்ஸ் லீக் சுற்றின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது.   10 அணிகள் பங்கேற்கும் 3-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
 
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், வாரியர்ஸ், கேப் கோப்ராஸ், நிï சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகளுக்கான இடத்திற்கு தகுதி சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தகுதி சுற்றில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
 
`ஏ' பிரிவில் ருகுணா (இலங்கை), டிரினிடாட் அண்ட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்), லீசெஸ்டர் ஷைர் (இங்கிலாந்து) ஆகிய அணிகளும், `பி' பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), ஆக்லாந்து (நியூசிலாந்து), சோமர்செட் (இங்கிலாந்து) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் இரண்டும், அத்துடன் மற்றொரு சிறந்த அணியும் சாம்பியன்ஸ் லீக் பிரதான சுற்றுக்குள் நுழையும்.  
 
போட்டியின் 2-வது நாளான நேற்று `ஏ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் டேரன் கங்கா தலைமையிலான டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியும், மேத்ï ஹோக்கர்டு தலைமையிலான லீசெஸ்டர்ஷைர் அணியும் மோதின. டாஸ் வென்ற டிரினிடாட் அணி முதலில் பேட் செய்தது. லென்டில் சிம்மோன்சும், அட்ரியன் பரத்தும் டிரினிடாட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.
 
இருவரும் அணிக்கு அற்புதமான தொடக்கம் அமைத்து தந்தது மட்டுமின்றி 17 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து அசத்தினர். பரத் 62 ரன்களும் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), சிம்மோன்ஸ் 67 ரன்களும் (58 பந்து, 7 பவுண்டரி) விளாசி அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டிரினிடாட் அணி 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. டேரன் பிராவோ 18 ரன்னுடனும் (9 பந்து, 2 சிக்சர்), ராம்டின் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  
 
பின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லீசெஸ்டர்ஷைர் அணி முதல் 6 ஓவர்களிலேயே சின்னாபின்னமாக சிதைந்தது. டிரினிடாட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீயும், வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பாலும் எதிரணியை முற்றிலும் சீர்குலைத்தனர். மெக்டொனால்டு (0), கோப் (9 ரன்), வெயின் ஒயிட் (0), ஜெப்பர்சன் (6 ரன்), நிக்சன் (0) ஆகிய 5 வீரர்கள் 20 ரன்களுக்குள் வெளியேற்றப்பட்டனர்.
 
இதன் பின்னர் ஜேம்ஸ் டெய்லரும், அப்துல் ரசாக்கும் (பாகிஸ்தானை சேர்ந்தவர்) இணைந்து தங்கள் அணியை அதல பாதாளத்தில் இருந்து ஓரளவு மீட்டனர். ஆனாலும், இவர்களால் அணியை 100 ரன்களை கடக்க உதவ முடிந்ததே தவிர, வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை. லீசெஸ்டர்ஷைர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களே எடுக்க முடிந்தது.
 
ஜேம்ஸ் டெய்லர் (56 ரன், 47 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துல் ரசாக் (21 ரன்), ஹெண்டர்சன் (10) ஆகியோர் தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கை தொடவில்லை.   இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் டிரினிடாட் அணி வெற்றியை ருசித்தது. சாமுவேல் பத்ரீ 4 ஓவர்களில் 7 ரன்களே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளும், ராம்பால் 14 ரன்களே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 18 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அட்ரியன் பரத் ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார்.
 
டிரினிடாட் அணி, தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ருகுணா அணியை தோற்கடித்து இருந்தது. அடுத்தடுத்து இரு வெற்றிகளின் மூலம் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது.

இது http://www.maalaimalar.கம என்ற இணைய தளத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது 

No comments:

Post a Comment