அஜீத் படங்களை போதையாக கருதுகிறவர்களுக்கு இது 'ஓல்டு மங்க்'காத்தா! மற்றவர்களுக்கு...? சேசிங் பட வரிசையில் வந்திருக்கிற மற்றுமொரு பாஸிங் க்ளவுட்!
மும்பை செட்டியார் ஜெயப்பிரகாஷிடம் வந்து சேர்கிற கிரிக்கெட் சூதாட்ட பணம் 500 கோடியை கொள்ளையடிப்பதற்காக கூட்டு சேரும் ஐந்து கெட்டவன்களின் கதைதான் இது. இதில் அஜீத், அர்ஜுன் தவிர மற்றவர்கள் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் லெவலை பார்டரில் தாண்டியவர்கள் என்பதால் அவர்கள் போடுகிற சண்டையும், சச்சரவுகளும் செல்லாத ரூபாய் நோட்டாக பல்லிளிக்கிறது.
(அதுவும் வெங்கட் பிரபுவின் இந்த 'தவுல் கோஷ்டி' இன்னும் எத்தனை கச்சேரிகளில் தொடருமோ?)சஸ்பெண்ட் ஆன போலீஸ் ஆபிசர் அஜீத், பாருக்கு போகிறார். தண்ணியடிக்கிறார். யார் தலையிலோ வைக்கப்படும் பிஸ்டலை பாயும் ஜீப்பில் வந்து பறிக்கிறார். யாரையோ காப்பாற்றுகிறார். யார் யாருடனோ படுக்கிறார். ஆனால் எல்லாம் எல்லாம் இன்ட்ரஸ்ட்டிங் என்பதுதான் அஜீத்தின் அல்டிமேட் அழகு. அவரது டை அடிக்காத தலையும், 'மே வந்தா எனக்கு 40 வயசு ஆகுது' என்ற பொய்யில்லாத பேச்சும் தியேட்டரில் பெரும் கரவொலி திருவிழாவை நடத்தி வைக்கிறது. "என்ன சொல்றாரு ஆக்ஷன் கிங்?" என்று அர்ஜுனை இவரும், "என்ன தல...?" என்று அஜீத்தை அர்ஜுனும் போட்டு வாங்குகிற காட்சியில் விசிலடித்தே வயிறு சோர்வான் ரசிகன்.
"இனிமே சத்தியமா தண்ணியடிக்கக் கூடாதுடா சாமி" என்ற தன் குடிகார சபதத்தை அன்றிரவே மீறும் அஜீத், ஒவ்வொரு முறையும் ஒரு ஜோடியோடு வருவதும், காலையில் எழுந்து "இது யாரு, ஒண்ணும் தப்பு நடந்துடலியே?" என்று கவலைப்படுவதும் கரைச்சல் கலவரமய்யா...
ஒரு விஷயத்தை சொல்லியாகணும். அஜீத்தின் ஆட்டமும், அவர் வைக்கிற டான்ஸ் ஸ்டெப்பும் ஒரு நடன இயக்குனரின் நேர்த்தியோடு ஸ்ருதி சுத்தம்! எப்ப கத்துக்கிட்டாரு இதையெல்லாம்?
அஜீத்-த்ரிஷா ஜோடிக்கு ஒரு அழகான பாடல் காட்சி இருக்கிறது. யுவனை விட, அதை படமாக்கிய ஒளிப்பதிவாளரும் கிராபிக்ஸ் குழுவும் பெயரை தட்டிச் சென்றிருக்கிறார்கள். தன் கண்ணெதிரே அப்பாவை காரிலிருந்து உருட்டிவிடும் அஜீத்தை பார்த்து த்ரிஷா கலங்கி நிற்கிற காட்சி உருக்கம். அவ்ளோ பெரிய படத்தில் தம்மாத்துண்டு த்ரிஷா. நமக்கும் கண் கலங்குது வாத்யாரே...
அஜீத்திற்கு சளைக்காத சரிபாதி ரோல் அர்ஜுனுக்கு. தனது புலிவேக பாய்ச்சலை இந்த படத்திலும் காண்பித்து வசூலை ஏற்ற உதவியிருக்கிறார் மனுஷன். ஆனால் ஆன்ட்ரியாவுக்கும் இவருக்குமான ரொமான்ஸ்சில் அநியாயத்திற்கு கத்தரி போட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. பொறுக்கல...
அஞ்சலி-வைபவ் ஜோடி கொஞ்சம் பாஸ் மார்க் வாங்குகிறது. அஜீத்துடன் ஆரம்பித்து, பிரேம்ஜியில் முடியும் லட்சுமிராயின் ஒட்டல் உரசல் ஒரு துப்பாக்கி ரவையில் முடிந்து போவது துர்பாக்கியம்.
விரும்பி தொலையாவிட்டாலும், தீப்பெட்டி வாங்கினால் 'தம்' இலவசம் என்கிற மாதிரி வெங்கட்பிரபு படங்களில் மட்டும் தானாகவே ஒட்டிக் கொள்ளும் பிரேம்ஜிக்கு இந்த படத்தில் அழுத்தமான ரோல். (அண்ணனுடையான் ரோலுக்கு அஞ்சான்) இவருக்கெல்லாம் லட்சுமிராயுடன் டூயட்டா? கெரகம்டா சாமி. ரசிக்க வைக்கிற ஒரு காட்சி, வேனில் இருந்து கொண்டே அவர் சிக்னலை இயங்க வைப்பதுதான்.
சமீபகாலத்தில் யுவன் ஃபெயில் மார்க் வாங்கியிருப்பது இந்த படத்தில்தான். சண்டைக்காட்சிகளில் பாய்ந்து வெடித்திருக்கிறார் மாஸ்டர் சில்வா. பாராட்டுகள். படமாக்கிய ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனுக்கும் ஒரு பலே.
வெங்கட் பிரபுவின் ஸ்கிரீன் ப்ளே, இட்லி தட்டில் தோசை வார்த்தது போல வடிவமில்லாமல் பிதுக்கிக் கொண்டு தெரிந்தாலும், ருசி அபாரம். அதற்கு முழு முதல் காரணம் அஜீத்... அஜீத் மட்டுமே!


No comments:
Post a Comment