Find us on Facebook

Saturday, September 17

விடைபெறும் திராவிட்டுக்கு சச்சின் புகழாரம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் ராகுல் திராவிட்டின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் மகத்தானது என்று மற்றொரு நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர் மேலும் கூறுகையில்:
ராகுல் திராவிட் எங்களுக்கு எப்போதும் ஒரு ரோல் மாடலாகவே திகழ்கிறார் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்புக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே.
அவரது சிறந்த கணங்களில் நானும் பங்கு பெற்றுள்ளேன் என்பது எனக்கு பெருமையளிக்கிறது. ஹைதராபாத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நாங்கள் இருவரும் சேர்ந்து 300 ஓட்டங்களுக்கும் மேல் எடுத்தது இன்றும் எனது இனிய நினைவுகளில் ஒன்று. அந்த இன்னிங்ஸில் ராகுல் துடுப்பாட்டம் அபாரமாக அமைந்தது.
அவரிடம் மிகவும் பாராட்டத்தக்கது அவரது உழைப்பு அவர் எப்பவும் ஆட்டத்திற்கு மேம்பட்ட நிலையிலேயே இருப்பார். துவக்கத்தில் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு சில தடுமாற்றங்கள் இருந்தது. ஆனால் அதனால் அவர் மனம் தளரவில்லை. அவர் அதனைக் களைய கடும் உழைப்பில் ஈடுபட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்கத்தில் அதிவேக ஓட்டக் குவிப்பு வீரர்களை நாம் கண்டிருக்கலாம் ஆனால் ராகுல் திராவிட் பேட்டிங் வித்தியாசமானது.
அவர் அதிவேகமாக ஓட்டம் குவிக்காமல் இருக்கலாம், ஆனால் அதிக நேரம் நின்று ஆடும் போது ஏற்படும் பயன்களை அவர் எப்போதும் அணிக்கு அளித்துள்ளார் என்றே கூறுவேன். அவரால் வேக ஓட்டக் குவிப்பில் ஈடுபடமுடியாது என்பதல்ல, அவர் சூழ்நிலைக்குத் தக்கவாறு விளையாடுவார். 2007ஆம் ஆண்டு பிரிஸ்டல் ஒருநாள் போட்டியில் அவர் 60 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்தது இன்னமும் எனது நினைவில் பசுமையாக உள்ளது. எங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை ஏனெனில் அவர் ஏற்கனவே நியூஸிலாந்துடன் அதிவேக அரைசதங்களை எடுத்துள்ளார்.
அவர் அணிக்கான ஒரு சிறந்த வீரர், அவரை விக்கெட் கீப்பிங் செய்யக்கோரிய போது உடனடியாக ஒப்புக் கொண்டார். ஏனெனில் அவர் துவக்கத்தில் விக்கெட் கீப்பராகவே இருந்தார். அவர் விக்கெட் கீப்பிங் செய்ய ஒப்புக் கொண்டது 2003 உலகக் கோப்பை போட்டிகளின் போது அணிக்கு பெரும் உதவியாக அமைந்தது.


நாங்கள் இருவரும் கிரிக்கெட் ஆட்டம் பற்றி இன்றும் நிறையவே விவாதித்து வருகிறோம். அவர் அணிக்காக துவக்கத்தில் களமிறங்கியுள்ளார், 3ஆம் நிலையில் விளையாடியுள்ளார். பின்னால் களமிறங்கியும் ஆடியுள்ளார். எப்போது எங்கெல்லாம் அவர் இறங்கவேண்டும் என்ற தேவை இருந்தபோதும் அவர் ஒத்துழைத்தார். அவரது கிரிக்கெட் பயணம் ஒரு மகத்தான பயணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment