சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் வாரியர்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி, ஐ.பி.எல். அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 3-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
இந்த போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. `ஏ' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் (இரு அணியும் இந்தியா), நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா), கேப் கோப்ராஸ் (தென்ஆப்பிரிக்கா), டிரினிடாட் அண்ட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய அணிகளும், `பி' பிரிவில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இரு அணியும் இந்தியா), வாரியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), தெற்கு ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா), சோமர்செட் (இங்கிலாந்து) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளான நேற்று பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஜோகன் போத்தா தலைமையிலான வாரியர்ஸ் அணியும் மோதின.
டாஸ் ஜெயித்த வாரியர்ஸ் அணி முதலில் பெங்களூர் அணியை பேட் செய்ய அழைத்தது. ரசிகர்களின் ஆரவாரமான ஆதரவுடன் பேட்டிங் தொடங்கிய பெங்களூர் அணியில் எந்தவொரு வீரரும் 35 ரன்களை தாண்டவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அளித்த கணிசமான பங்களிப்பால் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் (0) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சிறிது நேரம் வேடிக்கை காட்டினார்.
4-வது ஓவருக்குள் வெளியேற்றப்பட்ட அவர் 23 ரன்களில் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இதன் பின்னர் விராட் கோக்லி (34 ரன், 29 பந்து, 4 பவுண்டரி), டிவில்லியர்ஸ் (31 ரன், 25 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), சவுரப் திவாரி (28 ரன், 15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), முகமது கைப் (26 ரன், 20 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரின் அதிரடியால் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் 8 சிக்சர்களும் அடங்கும்.
வாரியர்ஸ் அணி தரப்பில் தெரோன் 4 விக்கெட்டுகளும், சோட்சோப், பார்னல், போத்தா, போஜே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வாரியர்ஸ் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தாலும், பிரின்ஸ் தூண் போல் நின்று அசத்தினார். அவருக்கு ஜோகன் போத்தா ஒத்துழைப்பு கொடுக்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பிரின்ஸ் 74 ரன்கள் (55 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்து ஆட்டம் இழந்தார்.
கடைசி 3 ஓவர்களில் வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட போது, கெய்ல் வீசிய 18-வது ஓவரில் போத்தா 2 சிக்சர் விளாசியது திருப்புமுனையாக அமைந்தது. இறுதி ஓவரில் வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன. பரபரப்பான 20-வது ஓவரை அரவிந்த் வீசினார். இதில் முதல் 3 பந்துகளில் ரன்கள் எடுக்காத வாரியர்ஸ் அணி ஜோகன் போத்தாவின் (42 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விக்கெட்டையும் இழந்தது. 4-வது பந்தில் நிக்கி போஜே ஒரு ரன் எடுக்க, 5-வது பந்தை பார்னல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
இதையடுத்து கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டன. இதனை எதிர்கொண்ட பார்னல் பந்தை லாங்-ஆன் திசையில் அடித்து விட்டு மின்னல் வேகத்தில் ஓடி இரண்டு ரன்களை எடுத்து, வெற்றிக்கனியை பறித்தார். வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

No comments:
Post a Comment