தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இங்கிலாந்தின் கவுண்டி அணியான லீசெஸ்டர்ஷைர் அணி, சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுடன் நடையை கட்டியது. 10 அணிகள் பங்கேற்கும் 3-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
இதில் விளையாட, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், வாரியர்ஸ், கேப் கோப்ராஸ், நிï சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 3 அணிகளுக்கான இடத்திற்கு தகுதி சுற்று போட்டிகள் ஐதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்தன.
தகுதி சுற்றில் கலந்து கொண்ட 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. `ஏ' பிரிவில் ருகுணா (இலங்கை), டிரினிடாட் அண்ட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்), லீசெஸ்டர்ஷைர் (இங்கிலாந்து) ஆகிய அணிகளும், `பி' பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), ஆக்லாந்து (நிïசிலாந்து), சோமர்செட் (இங்கிலாந்து) ஆகிய அணிகளும் இடம் பெற்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதன்படி தங்கள் பிரிவில் இடம் வகித்த இரு அணிகளையும் தோறக்டித்த டிரினிடாட் அணி பிரதான சுற்றுக்குள் நுழைந்தது. இந்த நிலையில், கடைசி நாளான நேற்று `ஏ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ருகுணா-லீசெஸ்டர்ஷைர் அணிகள் மோதின. டாஸ் வென்ற லீசெஸ்டர்ஷைர் அணி முதலில் ருகுணா அணியை பேட் செய்ய அழைத்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய ருகுணா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யா (6 ரன்), கேப்டன் உதவாட்டே (2 ரன்) ஏமாற்றினாலும், அவர்களுக்கு பிறகு வந்த தினேஷ் சந்திமால் (62 ரன், 51 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஜனித் பெரேரா (19 ரன்), சிரிவர்தனா (17 ரன்), கருணாநாயக்கே (28 ரன், 15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து, தங்கள் அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ருகுணா அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் குர்னே 3 விக்கெட்டுகளும், அப்துல் ரசாக் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அப்துல் ரசாக், முதல்தர 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 விக்கெட் இலக்கை நேற்று எட்டினார். பின்னர் 161 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லீசெஸ்டர்ஷைர் அணியில், தொடக்க ஆட்டக்காரரும் ஆல்-ரவுண்டருமான அப்துல் ரசாக் (பாகிஸ்தானை சேர்ந்தவர்) நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட்டை சுழற்றினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், அவரது அதிரடியால் ஸ்கோர் சிக்கலின்றி சீராக உயர்ந்தது.
அணியின் ஸ்கோர் 128 ரன்களாக உயர்ந்த போது, அப்துல் ரசாக் (68 ரன், 46 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அவரது விக்கெட் தான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. ரசாக் ஆட்டம் இழந்த போது, லீசெஸ்டர்ஷைர் அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 33 ரன்களே தேவைப்பட்டன. ஆனால் இறுதி கட்டத்தில் ருகுணா அணியின் பந்து வீச்சாளர்கள், கட்டுக்கோப்பாக பந்து வீசி எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். பரபரப்பான கடைசி ஓவரில் லீசெஸ்டர்ஷைர் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன.
20-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் சின்தான்கா பெரேரா, அருமையாக பந்து வீசி வெறும் 5 ரன்களே விட்டுக் கொடுத்து, தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார். லீசெஸ்டர்ஷைர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 156 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் ருகுணா அணி வெற்றி பெற்றது. ருகுணா அணி தரப்பில் குணரத்னே, அசங்கா சில்வா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் தோற்று இருந்த லீசெஸ்டர்ஸ்ஷைர் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
அதே சமயம் இரு லீக்கில் ஒன்றில் கண்ட ருகுணா அணி, கடைசி ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருந்தது. கடைசி லீக்கில் ஆடிய இரு அணிகளும் அடுத்த சுற்றை எட்டி விட்டதால், ருகுணா அணியும் வாய்ப்பை பறிகொடுத்தது.

No comments:
Post a Comment